அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கருப்பூர் - வக்கரமாரி கிராமத்தின் அமைதியான வடக்கு தெருவில், ஊரே வியந்து பார்த்த ஒரு தம்பதிதான் ஆறுமுகமும், பழனியம்மாளும்.
வாழ்க்கை அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கவில்லை என்றாலும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அளப்பரிய அன்பைத்தான் அவர்களின் வாழ்வாதாரமாக மாற்றியிருந்தார்கள். கூலி வேலை செய்து கிடைத்த சொற்ப வருமானத்திலும், ஒருவருக்கொருவர் நிழலாகவும், ஆதாரமாகவும் இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கழித்து வந்தனர்.
ஆனால், அந்த நிம்மதியான வாழ்க்கைக்கு விதியின் வடிவில் வந்த வயது முதிர்வு, ஆறுமுகத்தின் உயிரைப் பறித்தது. பல தசாப்தங்களாக தன்னுடனேயே பயணித்து, தனக்கான உலகமாக இருந்த கணவரின் மூச்சு நின்றுவிட்டதை அறிந்த நொடியில், பழனியம்மாளின் உலகமே நொடி பொழுதில் இருண்டுபோனது.
கணவனின் உயிரற்ற உடலருகே அமர்ந்து, கதறித் துடித்த அந்தத் தாயின் கண்ணீர், அங்கிருந்த ஒவ்வொருவரின் நெஞ்சையும் பிழிந்தெடுத்தது. நீ இல்லாத உலகில் எனக்கு என்ன வேலை? என அழுகையினூடே கேட்கத் துடித்த பழனியம்மாளின் இதயம், அந்தப் பேரதிர்ச்சியையும், துயரத்தையும் தாங்க முடியாமல் சில மணி நேரங்களிலேயே துடிப்பதை நிறுத்திக்கொண்டது. வாழ்நாளில் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் அன்பால் கட்டுண்டு வாழ்ந்தவர்கள், மரணத்திலும் தங்களைப் பிரித்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தது போல, அடுத்தடுத்த மணி நேரங்களில் உயிரை துறந்தனர்.
குழந்தை இல்லாத சூழலிலும், ஒருவருக்கொருவர் உலகமாக வாழ்ந்து காட்டிய அந்தத் தம்பதியின் பிரியாத அன்பை நினைத்து, கோடாலி கருப்பூர் கிராமமே இன்று கண்ணீரில் நனைந்து, மீள முடியாத பெருஞ்சோகத்தில் மூழ்கியது
"நீ இல்லாத உலகம் எனக்கு வேண்டாம்"
அரியலூரில் நெஞ்சை உலுக்கிய சோகம்.!
"நீ இல்லாத உலகம் எனக்கு வேண்டாம்" வாாழ்ந்ததும் சேர்ந்து... மறைந்ததும் சேர்ந்து! அரியலூரில் நெஞ்சை உலுக்கிய சோகம்.!
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:





